ஒரு அரசனின் பஞசனையில் மந்த விசர்ப்பணி என்கிற சீலைப் பேன் ஒன்று வசித்து வந்தது.
இந்த பஞ்சனைக்கு ஒரு மூட்டைப் பூச்சி எப்படியோ வந்து சேர்ந்தது. இதைப் பார்த்த சீலைப் பேனுக்கு பயமாகி விட்டது.
" நீ எப்படி இங்கே வந்தாய்? இங்கிருந்து போய் விடு" என்றது அந்த சீலைப் பேன்.
"இந்த ராஜாவின் பஞ்சனை உனக்கு மட்டுமா சொந்தம்? மகாராஜாவே மக்களுக்குச் சொந்தம். அவருடைய பஞ்சனையை நீ மட்டும் சொந்தம் கொண்டாடுவதா? நான் போக முடியாது." என்று மறுத்தது அந்த மூட்டைப் பூச்சி.
" நீ பொல்லாதவன். முட்களைப் போன்ற உன் பற்களால் தூங்குவதற்கு முன்பே கடிப்பவன். சமய சந்தர்ப்பம் தெரியாத நீ இந்த ராஜாவின் படுக்கையில் இருக்கத் தகுதி உடையவனல்ல. இந்த இடத்தை விட்டு உடனே போய் விடு. " என்று சீலைப்பேன் சொல்லியது. அதற்கல்லவா தெரியும் பக்குவமாக அந்தப் பஞ்சனையில் நாளைத் தள்ளி வருவதில் உள்ள சிரமம்.
ஆனால் கெட்டிக்கார மூட்டைப் பூச்சி சட்டென்று அதன் காலைப் பற்றிக் கொண்டு," நான் இங்கே அப்படி செய்ய மாட்டேன். நீ சொன்னபடியெல்லாம் கேட்பேன். என்னை இங்கிருக்க அனுமதிக்க வேண்டும." என்று கெஞ்சியது. அரசனுடைய ரத்தம் அதற்கு உணவாகக் கிடைக்கும் போது காலைப் பிடித்துக் கெஞ்சுவதில் தவறு ஒன்றும் இல்லை என்று நினைத்துக் கொண்டது அந்த மூட்டைப் பூச்சி.
காலைப் பிடித்து கெஞ்சிக் கேட்டதால் கடுமையாகப் பேச முடியாத சீலைப் பேன் தன் நிலையில் இருந்து சற்று இறங்கி வந்தது."அரசர் உடலில் வெடுக்கென்று கடிக்கக் கூடாது. அவர் தூங்கிய பின்பு அவருக்கு வலி ஏற்படாமல் கடிக்க வேண்டும். அளவாக ரத்தம் குடிக்க வேண்டும்" என்று சில நிபந்தனைகளை விதித்து அங்கே தங்கிக் கொள்ள அனுமதித்தது.
இரவு நேரமாகி விட்டதால் அரசர் களைப்புடன் பஞ்சனையில் வந்து படுத்தார். சில நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. அந்த மூட்டைப் பூச்சி அரசனின் இரத்தத்தைக் குடிக்கும் ஆர்வத்துடன் நறுக்கென்று கடித்தது.
தன்னை ஏதோ ஒன்று கடிப்பதை உணர்ந்த அரசன் திடுக்கிட்டு எழுந்து சேவகர்களை அழைத்தான். சேவகர்களிடம் இந்தப் பஞ்சனையில் ஏதோ ஒன்று கடிப்பது போலிருக்கிறது பாருங்கள் என்று கட்டளையிட்டான்.அவர்கள் பஞ்சனை முழுவதும் தேடினார்கள். மூட்டைப் பூச்சி வேகமாகக் கட்டிலின் இடுக்கிற்குள் சென்று மறைந்து கொண்டது. சீலைப் பேன் போர்வையில் ஒட்டிக் கொண்டிருந்ததால் சேவகரின் பார்வையில் பட்டு நசுக்கப்பட்டது.தகுதியில்லாதவருக்கு அளிக்கும் அடைக்கலம் தனக்குத்தான் ஆபத்தைத் தரும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
No comments:
Post a Comment